தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஆசீர்வாதம் இருப்பதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்று திட்டவட்டமாக மறுத்தார். பாஜாகவில் உறுப்பினர்களாக நீடிப்பவர்கள் வேறு எந்தவொரு இயக்கத்திலும் அங்கம் வகிக்க முடியாது என்று தெளிவுபடுத்திய அவர், அண்ணாமலை கட்சியிலிருந்து வெளியேறியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
மேலும், கருத்து வேறுபாடுகளால் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி மீண்டும் தாய்க்கழகத்திற்குத் திரும்பி வரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் பாரதிய ஜனதா கட்சி மிகவும் பலமாகவே உள்ளதாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு நேரடிப் போட்டியாக பாஜகவே உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அண்ணாமலையின் புதிய அரசியல் நகர்வுகளால் கட்சியின் வாக்கு வங்கியிலோ அல்லது உள்கட்டமைப்பிலோ எவ்வித சரிவும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், தொண்டர்களும் நிர்வாகிகளும் முழு வீச்சில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழகத்தில் பாஜகவின் பலம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும் கட்சியில் இருந்து விலகுவதாக இருந்தால் முன்கூட்டியே சொல்லி இருக்கலாம் ஹெலிகாப்டர் மூலமாக பாஜகவுக்காக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் என்றும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் பாஜகவுக்கு திரும்பி வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
