பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வரும் நிலையில், பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடிகளைத் திருடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை பஞ்சாப் மாகாண அரசு கொண்டு வந்துள்ளது.

பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமரும், ராணுவத் தளபதி ஆசிம் முனீரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தற்போது அங்கு பொதுச் சொத்துக்கள் திருடப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 10,000 மேன்ஹோல் மூடிகள் திருடப்படுவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, போதைக்கு அடிமையானவர்கள் இரும்பு மூடிகளைத் திருடி, பழைய இரும்பு கடைகளில் விற்றுப் பணம் ஈட்டி வருகின்றனர். “பகலில் மூடி போட்டால், இரவுக்குள் அது காணாமல் போய்விடுகிறது” என அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:

“பஞ்சாப் மாகாணத்தில் புதிய சட்டம் ஒன்றை நாங்கள் அமல்படுத்துகிறோம். இதன்படி, மேன்ஹோல் மூடிகளைத் திருடுபவர்கள், அதை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் என அனைவருக்கும் 1 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும், மூடி இல்லாத மேன்ஹோலில் விழுந்து யாராவது உயிரிழந்தால், சம்பந்தப்பட்ட திருடர்களுக்கு 10 ஆண்டுகள் சிறையுடன் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த வினோத சட்டத்தை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். “நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதால், இப்போது மேன்ஹோல் மூடிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், “சிறைக்குச் சென்றால் அங்காவது மூன்று வேளை இலவச உணவு கிடைக்குமே” எனச் சிலர் வறுமையின் உச்சத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

கடுமையான தண்டனைகள் மூலம் இந்தத் திருட்டைத் தடுக்க அரசு முயன்றாலும், மக்களின் அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இத்தகைய சட்டங்கள் பலன் தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.