மலேசியாவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், விற்பனையாகாமல் மீந்துபோன சிக்கன் மற்றும் மட்டன் துண்டுகளைத் தண்ணீரில் கழுவி, மீண்டும் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாற முயன்ற அதிர்ச்சி வீடியோ வெளியானதை அடுத்து, அந்த உணவகம் அதிரடியாக மூடப்பட்டது.
மலேசியாவின் நெகிரி செம்பிலான் பகுதியில் உள்ள ‘நாசி கண்டார்’ (Nasi Kandar) உணவகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவு நேரத்தில் அந்த உணவகத்தின் பின்புறம் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த ஊழியர்கள் செய்த காரியத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். விற்பனையாகாத கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் டோஃபு (Tofu) ஆகியவற்றை ஊழியர்கள் தண்ணீரில் கழுவி, மீண்டும் பயன்படுத்துவதற்காகத் தட்டுகளில் அடுக்கி வைத்துள்ளனர்.
இதை அந்த நபர் வீடியோ எடுத்தபோது, “உணவை மீண்டும் சமைக்கப்போகிறோம், இதில் ஆபத்து ஒன்றும் இல்லை” என்று ஊழியர்கள் அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் அதிரடி ஆய்வு நடத்தினர். இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஜுரைடா முகமது கூறுகையில், “உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதற்காகவும் உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிப்ரவரி 17-ஆம் தேதி வரை உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அந்த உணவகம் மேலும் பல விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அதாவது முறையான வணிக உரிமம் இன்றி உணவகம் செயல்பட்டது. பணியாளர்களுக்கு டைபாய்டு தடுப்பூசி போடப்படவில்லை.
உணவகம் முழுவதும் கரப்பான் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. தூய்மைப் பராமரிப்பு அட்டவணை எதுவும் பின்பற்றப்படவில்லை.
மேலும் பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயல்பட்ட அந்த உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
