இத்தியோப்பியாவைச் சேர்ந்த பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது 6 வயது மகளைக் கூட்டி கொண்டு  மருத்துவமனைக்கு அலறியடித்துக்கொண்டு ஓடினார். காரணம், அந்தச் சிறுமிக்குச் செய்யப்பட்ட ‘பெண் உறுப்பு சிதைப்பு’ சடங்கால் ரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது.

பாத்திமா கூறுகையில், “எனக்கு 10 வயதாக இருக்கும்போது, என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கீழே தள்ளி, எந்தவித மயக்க மருந்துமின்றி அந்தச் சடங்கைச் செய்தார்கள். அந்த வலி இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. திருமணம் செய்ய வேண்டும் என்றால் இது கட்டாயம் என்று என் அம்மா சொன்னார்” என உருக்கமாகத் தெரிவித்தார்.

பாத்திமா தனது மகளுக்கு இந்தச் சடங்கைச் செய்ய விரும்பவில்லை. ஆனால், ஊர் பெரியவர்கள் அவரிடம், “இதைச் செய்யாவிட்டால் உன் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைப்போம்; உங்கள் மகளை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்” என மிரட்டியுள்ளனர். இதனால் வேறு வழியின்றித் தனது மகளை அந்தக் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இந்தச் சடங்கால் பெண்களுக்கு உடனடியாக ரத்தப்போக்கு, தொற்று மற்றும் அதிர்ச்சி ஏற்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் பிரசவத்தின் போது மரணம், மலட்டுத்தன்மை மற்றும் தீராத மன உளைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.