மேற்கு வங்க சட்டமன்றத்தில் கடந்த புதன்கிழமை மேற்கு வங்க நிதி மசோதா 2025 (West Bengal Finance Bill, 2025) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மாநில உதவித் துணை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்தார். இதில் 1909-ம் ஆண்டு கொண்டுவந்த Bengal Excise Act சட்டத்தில் திருத்தம் செய்து, ‘ON’ வகை மதுபானக் கடைகளில் பெண்கள் வேலை செய்ய தடை விதித்திருந்த பிரிவை நீக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி  மதுபான  கடைகளில் பெண்களும் வேலை பார்க்கலாம். இந்தத் தடை ஒரு பாலின வேறுபாடு குறித்ததாக இருப்பதால், அதனை நீக்குவது அரசின் மமுக்கிய கடமை என அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, கள்ளச்சாராய உற்பத்தியை தடுக்கும் வகையில் வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விநியோகத்தை அரசு கண்காணிக்க அதிகாரம் அளிக்கும் விதமாக உள்ளது. இதனுடன், 1944ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட Bengal Agricultural Income-tax Act-இல் திருத்தம் செய்யப்படும் எனவும், சிறிய தேயிலை தோட்டங்களுக்கு வரிவிலக்கு அளித்து, கொரோனா பேரிடருக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சமாளிக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “இந்த மசோதாவின் அமலுக்கு எந்தவிதமான நிதிச்சுமையும் அரசு மீது ஏற்படாது” என அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது.