அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் மோதல் மற்றும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்மூஸ் ஜலசந்தியை தாங்கள் முடக்கவில்லை என்றும், ஈரானிய துறைமுகங்களையே முற்றுகையிட்டுள்ளதாகவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாக விளங்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அதன் முக்கிய துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்க போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது உலகளாவிய கப்பல் போக்குவரத்தைப் பாதிப்பதல்ல, மாறாக ஈரானின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சி என்றும் அமெரிக்கா தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், ஹார்மூஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தகர்க்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்தால் இந்த தற்காலிக அமைதி நிலவி வருகிறது.
இருப்பினும், ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரானிய கடற்படையின் அனுமதி பெற வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. தற்போதைய அமெரிக்காவின் இந்த துறைமுக முற்றுகை அறிவிப்பு, போர் நிறுத்தக் காலத்திலும் ஈரானுக்கு எதிரான அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதை உறுதிப்படுத்துகிறது.
