அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டுடன் ஒருவேளை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானால் தான் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தான் மக்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையைத் தந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவொரு அமெரிக்க அதிபரும் பாகிஸ்தான் மண்ணில் கால் வைக்கவில்லை என்பது அந்த நாட்டுக்கு மிகப்பெரிய ராஜீய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு, இந்தியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் வெறும் 24 மணி நேரத்திற்காகப் பாகிஸ்தான் சென்றார்; அதுவே கடைசிப் பயணமானது. அதன்பின் பதவியில் இருந்த பராக் ஒபாமா, ஜோ பைடன் மற்றும் டிரம்பின் முதல் பதவிக்காலம் என யாருமே பாகிஸ்தானுக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை.

1947-க்குப் பிறகு பாகிஸ்தான் தலைவர்கள் 42 முறை அமெரிக்கா சென்றிருந்தாலும், வெறும் 5 அமெரிக்க அதிபர்கள் மட்டுமே பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அமெரிக்க அதிபர்கள் பாகிஸ்தான் சென்றபோதெல்லாம் அங்கு ராணுவ ஆட்சிதான் நடந்துள்ளது. ஒபாமா இரண்டு முறை இந்தியா வந்தும் பாகிஸ்தானைப் புறக்கணித்தது அந்த நாட்டுக்கு இன்றும் ஆறாத வடுவாகவே உள்ளது.

தற்போது டிரம்ப் கொடுத்துள்ள இந்த வாக்குறுதி நனவாகுமா அல்லது பழையபடி பாகிஸ்தான் வெறும் ஏமாற்றத்தையே சந்திக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.