மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கேலி செய்து ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மையமாக வைத்து இந்தப் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஹங்கேரியில் உள்ள ஈரானிய தூதரகம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் 34 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் டிரம்ப் ஒரு சிறிய ‘டெஸ்லா சைபர்-ட்ரக்’ போன்ற வாகனத்தை ஓட்டிச் செல்வது போன்றும், ஒரு குறுகலான பாதையில் திரும்ப முடியாமல் அந்த வாகனம் சிக்கிக் கொள்வது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘ஆஸ்டின் பவர்ஸ்’ என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படக் காட்சியைத் தழுவி, அதிநவீன AI தொழில்நுட்பத்தில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
Trump’s attempt to pass through the Strait of Hormu!🤭#StraitOfHormuz#PersianGulf pic.twitter.com/ycRF78vywV
— Iran Embassy Hungary (@IRANinHUNGARY) May 7, 2026
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று, இறுதியில் தோல்வியைச் சந்திக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அந்த வீடியோவின் கீழ், “ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல டிரம்பின் முயற்சி!” என்ற வாசகத்தையும் ஈரானிய தூதரகம் இணைத்துள்ளது.
ஏற்கெனவே ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், தற்போது ஒரு நாட்டின் தூதரகமே மற்றொரு நாட்டின் அதிபரைக் கேலி செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டிருப்பது சர்வதேச ராஜதந்திர வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏவுகணைகளுக்குப் பதில், தற்போது ‘மீம்’கள் மற்றும் ‘AI’ வீடியோக்கள் மூலம் டிஜிட்டல் போர்க்களத்தை ஈரான் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
