உலகின் நீளமான நதியான நீல் நதியின் ஆக்ரோஷமான நீரோட்டத்தின் நடுவே, இளைஞர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி சாதாரணமாக மிதந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் (@travel_sentas) பகிரப்பட்ட இந்த வீடியோவில், உகாண்டாவின் நீல் நதி பார்ப்பதற்கே அச்சம் தரும் வகையில் வெள்ளை நுரை ததும்ப சீறிப்பாய்கிறது. அந்த ராட்சத அலைகளின் நடுவே இளைஞர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, ஏதோ ஒரு அமைதியான ஏரியில் குளிப்பது போல மிகச் சாதாரணமாக மிதந்து செல்கிறார். அந்த நதியின் ஓசை காதுகளைப் பிளக்கும் வகையில் இருந்தாலும், அந்த இளைஞரின் முகத்தில் எவ்வித பயமும் இல்லை.
இந்த வீடியோவைப் பார்த்த கோடிக்கணக்கான மக்கள், “இவருக்கு மரண பயமே இல்லையா?” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று கூறினாலும், பலரும் இதனை உலகின் மிக ஆபத்தான நீச்சல் அனுபவம் என்று வர்ணித்து வருகின்றனர். ஒரு நொடி தப்பினாலும் உயிர் போகக்கூடிய அந்த வெள்ளப் பெருக்கில், அவர் காட்டும் தன்னம்பிக்கை அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
View this post on Instagram
இந்தச் சாகசத்தின் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய்ந்தபோது, உகாண்டாவின் நதிக்கரையோரம் வசிக்கும் உள்ளூர் மக்கள் சிறுவயது முதலே இந்த நதியின் வேகத்தையும், ஆழத்தையும் அறிந்து வளர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு இந்த ஆபத்தான நீரோட்டம் பழகிப்போன ஒன்று. பல ஆண்டுகால அனுபவத்திற்குப் பிறகே இத்தகைய சாகசங்களை அவர்கள் மேற்கொள்கின்றனர்.
இருப்பினும், எவ்விதப் பயிற்சியும் இன்றி இது போன்ற விபரீதச் செயல்களில் ஈடுபடுவது தற்கொலைக்குச் சமம் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ உலக அளவில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.
