கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச நாணய நிதியம் (IMF) 1.32 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.11,000 கோடி) புதிய கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 17 பில்லியன் டாலராக உயரும் என்றாலும், விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, பாகிஸ்தானுக்கு இரண்டு திட்டங்களின் கீழ் இந்த நிதியுதவியை வழங்குகிறது.

இந்த நிதியுதவி மூலம் பாகிஸ்தானின் காலியான கருவூலம் ஓரளவு நிரப்பப்பட்டாலும், நாட்டின் இறக்குமதி மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு மட்டுமே இது தற்காலிக ஆறுதலாக அமையும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்தக் கடனை வழங்குவதற்கு ஐ.எம்.எஃப். அமைப்பு மிகவும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வரி வசூலை அதிகரிக்க வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் அரசு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை  உயர்த்தியுள்ளது.

ஏற்கெனவே வேலையின்மை, வறுமை மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளால் தவித்து வரும் அந்நாட்டு மக்களுக்கு, இந்த வரி உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தும். ஐ.எம்.எஃப். நிபந்தனைகளை நிறைவேற்ற அரசு எடுக்கும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் கூறுகையில், நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியை எட்டத் தேவையான கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த, வரும் பட்ஜெட் ஐ.எம்.எஃப். ஆலோசனையின் படியே தயாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இருப்பினும், வரி வசூல் செய்வதில் பாகிஸ்தானின் வருவாய்த் துறை தொடர்ந்து தோல்வியடைந்து வருவதும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலும் அந்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாகவே உள்ளது. இதுவரை ஐ.எம்.எஃப் வழங்கிய மொத்த கடன் தொகுப்பில் பாதியை மட்டுமே பாகிஸ்தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.