அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில் வசித்து வந்த ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது குமேல் சேக் (26) என்ற மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த இவர், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுத் தனது பட்டத்தைப் பெற்றுக்கொண்ட மறுநாளே, இரவு தூங்கும்போது படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார்.

​மேற்படிப்புக்காக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த இந்த இளைஞன், தனது வாழ்வின் மிக முக்கியமான மைல்கல்லை எட்டிய உடனே இயற்கை எய்தியிருப்பது மருத்துவ ரீதியான விவாதங்களையும் எழுப்பியுள்ளது. தற்போது, மாணவர் சேக்கின் உடலைத் தாயகத்திற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும், அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டும் பணிகளிலும் அமெரிக்காவிலுள்ள தன்னார்வ அமைப்புகளும் இந்தியத் தூதரகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.