மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், இந்திய ரயில்வே பயணத்தின்போது எலிகள் பயணப் பைகளைச் சேதப்படுத்திய வழக்கில் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்னியைச் சேர்ந்த விபின் துபே என்பவர் கடந்த 2020-ஆம் ஆண்டில் கல்யாண் நிலையத்திற்குச் செல்வதற்காகத் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்துள்ளார்.

பயணத்தின் போது அவர் தனது பையைப் பத்திரமாக வைத்திருந்தபோதிலும், பெட்டிக்குள் இருந்த எலிகள் அவரது பையையும், அதற்குள் இருந்த ஆடைகளையும் கடித்துச் சேதப்படுத்தின. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் நுகர்வோர் ஆணையத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பயண வசதிகளை வழங்க ரயில்வே தவறியதைச் “சேவைக் குறைபாடு” எனக் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இதனால் பயணிக்கு ஏற்பட்ட மனரீதியான மற்றும் நிதி இழப்பிற்கு ரயில்வேயே பொறுப்பு என்று கூறி, அவருக்குச் சேதமடைந்த பொருட்களுக்காக 15,000 ரூபாயும், மன உளைச்சலுக்கு 5,000 ரூபாயும், வழக்குச் செலவிற்காக 5,000 ரூபாயும் என மொத்தம் 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் மௌசுப் அகமது பிட்டு மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் திறம்பட வாதாடிய இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.