பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் கடந்த மார்ச் 25 அன்று இரவு, ராஜஸ்தானைச் சேர்ந்த ஸ்ரீராஜ் பரத்வாஜ் என்ற 37 வயது ஐடி ஊழியர் தனது சக ஊழியருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான பாதையில் வந்த ஆட்டோ ஒன்று காரின் மீது லேசாக உரசியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவருடன் சேர்ந்த மற்றொரு ஆட்டோ கும்பலும் காரை விரட்டிச் சென்று மறித்துள்ளனர். காரின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்ததோடு, பாதுகாப்பு தேடி ஒரு ஐடி பூங்காவிற்குள் நுழைந்த ஸ்ரீராஜை அங்கேயே வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

​இந்தத் தாக்குதலில் முகத்தில் பலத்த காயமடைந்த ஸ்ரீராஜ், தனது குமுறலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “இனி பெங்களூரு பக்கமே வரமாட்டேன், இந்த ஊரை விட்டு வெளியேறப் போகிறேன்” என அவர் விரக்தியில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் தரப்பிலோ, கார் மோதியதால் ஏற்பட்ட சேதத்திற்குப் பணம் கேட்கவே துரத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, பெங்களூரு சாலைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த ‘ரோடு ரேஜ்’ சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.