அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா எண்ணெய் வாங்கும் நாடுகளை குறிவைத்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நோட்டோ  (NATO) நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, ரஷ்யாவுக்கு எதிராக பெரிய தடைகள் விதிக்க வேண்டும் என ட்ரம்ப் தனது சமீபத்திய ‘ட்ருத் சோஷியல்’ பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சீனாவுக்கு எதிராக 50 முதல் 100 சதவீதம் வரை சுங்கவரி விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவே ரஷ்யாவுக்கு பெரிய ஆதரவாளராக இருப்பதால், இந்த கடும் வரிகள் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் என்று ட்ரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலாக, பீஜிங் “நாங்கள் யுத்த சதி செய்யவில்லை, யுத்தத்தில் ஈடுபடவும் இல்லை” என்று அமெரிக்காவுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்தது.

சமீபகாலமாக இந்தியா மீது கடுமையான விமர்சனங்கள் செய்து வந்த ட்ரம்ப், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். ரஷ்யா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்திருந்த ட்ரம்ப், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை “மிகச்சிறந்த பிரதமர்” என்றும் “நல்ல நண்பர்” என்றும் புகழ்ந்துள்ளார்.

அமெரிக்காவின் உள் அரசியல் அழுத்தம், இந்தியா-சீனா-ரஷ்யா இடையேயான நெருக்கம் ஆகியவை ட்ரம்பை தனது அணுகுமுறையில் மாற்றம் செய்ய வைத்துள்ளன. குறிப்பாக, சமீபத்திய எஸ்.சி.ஓ (SCO) மாநாட்டில், மோடி-புடின், மோடி-ஷி ஜின்பிங் இடையேயான அன்பான சந்திப்புகள் வாஷிங்டனை பதற்றமடைய வைத்தது.

இந்தியா தனது வேளாண்மை, பால் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் எந்தவித சலுகையும் அளிக்கமாட்டோம் என்ற உறுதியுடன் அமெரிக்க அழுத்தத்திற்கு இடமளிக்கவில்லை. இதனால், இந்தியாவின் நட்பை  முழுமையாக இழக்கக்கூடாது என்பதற்காக, ட்ரம்ப் தனது கொள்கையை மாற்றி, சீனாவை குறிவைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

“சீனாவுக்கு எதிராக 100 சதவீதம் வரை வரி விதிக்கப்பட வேண்டும். இந்தியாவை தூரம்  வைக்காமல், கூட்டாளியாக வைத்துக்கொள்வதே ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒரே வழி” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போது, இந்தியாவுக்கு சுமூகமான அணுகுமுறையும், சீனாவுக்கு கடுமையான சவால்களும் அமெரிக்காவின் புதிய உலக அரசியல் தந்திரமாக வெளிப்படுகின்றன.