நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகிய நிலையில் சோசியல் மீடியாக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் இடைக்கால பிரதமராகவும் அதே நேரத்தில் முதல் பெண் பிரதமராகவும் ஜெனரல் இசட் போராட்டக்காரர்களின் ஆதரவோடு முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி பொறுப்பேற்றார். இந்நிலையில் நாட்டின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசிலா கார்கி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து அவர் பேசியதாவது, நான் அதிகாரத்தை ருசிக்க வரவில்லை. நான் 6 மாதங்களுக்கு மேல் அதிகாரத்தில் இருக்க மாட்டேன். மக்களின் ஆதரவோடு விரைவில் அதிகாரத்தை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன். நேபாளத்தில் நடந்த ஜெனரல் இசட் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார்கள்.

அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு மில்லியன் நேபாள ரூபாய் நோட்டுகள் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அதே நேரத்தில் போராட்டத்தின் போது பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களை சும்மா விடமாட்டோம் என்றும் எச்சரித்தார்.