காட்டில் விலங்குகள் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் சாகசங்களும் ஆபத்துகளும் நிறைந்தது. அங்கு என்ன நேரிடும் என்பதை யாரும் கணிக்க முடியாது. இந்த உண்மையை மீண்டும் நினைவூட்டும் வகையில், ஒரு அதிர்ச்சி தரும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மிகவும் பரபரப்பாக பரவும் அந்த வீடியோவில், தாயாகிய யானை, தனது குட்டியை முதலை தாக்கத்திலிருந்து தைரியமாக காப்பாற்றும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவில், தண்ணீர் நிரம்பிய ஒரு சிறிய குழிக்கரையில் குட்டி யானை ஒன்று  வேடிக்கை பார்க்கும் வகையில் நின்று கொண்டிருப்பதையும், அதன் தாய் அருகிலேயே கண்காணித்து நிற்பதையும் காணலாம். அந்த வேளையில், திடீரென ஒரு முதலை, குட்டி யானையை நோக்கி வேட்டையாட முனைந்து தண்ணீரிலிருந்து வெளியேறும். ஆனால், தாயான யானை அதைக் கண்டதும் துரிதமாக செயல்பட்டு, முதலையை விரட்டியது.

 

தன்னைவிட பலம் வாய்ந்த யானையின் திடீர் தாக்குதலால் முதலை பீதியடைந்து தண்ணீருக்குள் மீண்டும் குதித்து ஓடுகிறது. யானையின் கால் முதலையின் மீது விழவில்லை என்பதே அதற்கு அதிர்ஷ்டம். இல்லையெனில் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பிருந்தது. இந்நிலையில், இதை பார்த்த குட்டி யானை, பயந்த நிலையில் தாயின் அருகே ஒளிந்து கொள்கிறது.

இந்த வீடியோ, சமூக ஊடக தளமான எக்சில்’ @TheeDarkCircle என்ற ஐடியிலிருந்து பதிவேற்றப்பட்டுள்ளது. “யானை தனது குட்டியை முதலையிலிருந்து பாதுகாக்கிறது” என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த 16 வினாடிகள் கொண்ட காணொளி, இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும்  நூற்றுக்கணக்கானோர் இந்த காணொளியை லைக் செய்து, தாயின் தைரியத்தையும், காட்டிலுள்ள உயிரின் அர்த்தமுள்ள போராட்டத்தையும் பாராட்டியுள்ளனர்.