ஐபிஎல் அரங்கில் மிகவும் பிரபலமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைக் கைப்பற்ற, உலகப்புகழ் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பின் உரிமையாளரான கிளேசர் குடும்பம் தீவிரம் காட்டி வருகிறது. 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் ஆகிய இரண்டிலும் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, அந்த அணியின் மதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதன் காரணமாக, தற்போதைய உரிமையாளரான ‘டியாஜியோ’ நிறுவனம் அணியை விற்க முடிவு செய்துள்ள நிலையில், கிளேசர் குடும்பத்தினர் சுமார் 1.8 பில்லியன் டாலர் (சுமார் ₹16,300 கோடி) மதிப்பிலான பிரம்மாண்ட ஏலத்தொகையை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஏலப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்களுடன் சேர்த்து மொத்தம் 9 நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இதில் இந்தியத் தொழில் அதிபர் அதார் பூனவல்லா, அதானி குழுமம் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ போன்ற முன்னணி நிறுவனங்களும் அடங்கும்.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தின் டி20 லீக்கில் ‘டெசர்ட் வைப்பர்ஸ்’ அணியை வைத்துள்ள கிளேசர் குடும்பம், இந்தியச் சந்தையில் கால்பதிக்க ஆர்சிபி ஒரு சரியான வாய்ப்பாகக் கருதுகிறது. மார்ச் 2026-க்குள் இந்த விற்பனை நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆர்சிபி அணியின் புதிய உரிமையாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
