ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தக் கூடாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலின் ‘சேனல் 12 நியூஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த விபரங்களை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.

இந்த மோதல் இன்னும் பெரிய அளவில் வெடித்தால், ஒரு முக்கியமான கட்டத்தில் இஸ்ரேல் உலக நாடுகளிடம் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, ஈரானை தனியாக எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிராந்தியத்தில் அமைதியை விரும்பும் ஐந்து நாடுகளின் கோரிக்கையை ஏற்று, இஸ்ரேல் திட்டமிட்டிருந்த பெரும் தாக்குதலின் தீவிரத்தை தனது தலையீட்டின் மூலம் குறைத்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்காவுடன் ஒரு சுமூகமான உடன்பாட்டை எட்டுவதில் ஈரான் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, இஸ்ரேலிய விமானங்கள் ஈரானிய இலக்குகளை நோக்கி புறப்பட்ட பிறகுதான் வாஷிங்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தனது நேரடி தலையீடு பெரும் போரைத் தடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ட்ரம்ப்பின் பகிரங்கமான போர் நிறுத்த அழைப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலும் ஈரானும் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ள போதிலும், இரு நாடுகளும் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை முழுமையாக நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.