இந்தியா மற்றும் ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மிக நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும் கூட, ரஷ்யா இந்தியாவின் பக்கபலமாக நின்றிருக்கிறது இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் வர்த்தகக் கூட்டாளியாகத் திகழ்கிறது.
ஆனால், சமீபகாலமாக ரஷ்யாவுடன் நெருங்க முயன்று வரும் பாகிஸ்தானின் முயற்சிகள் தற்போது பலனளித்துள்ளன. கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், ரஷ்யாவும் பாகிஸ்தானும் ஒரு முக்கிய நேரடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மேலும் இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுடன் இவ்வாறு கைகோர்த்திருப்பது இந்தியாவிற்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி மற்றும் ரஷ்ய பிரதிநிதி விளாடிமிர் கொலோகோல்ட்சேவ் ஆகியோருக்கு இடையே இந்த உடன்படிக்கை கையெழுத்தானது. இதன் மூலம் சட்டவிரோத ஊடுருவலைக் கட்டுப்படுத்துதல், குற்றவாளிகளை நாடுகடத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
