போட்ஸ்வானாவில் நடைபெற்று வரும் 6 அணிகள் பங்கேற்கும் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில், லெசோதோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பிரேசில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய லெசோதோ அணி, பிரேசிலின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி 6.2 ஓவர்களில் வெறும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியின் 7 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பிரேசில் வீராங்கனை லாரா கார்டோசோ 3 ஓவர்கள் வீசி, 2 மெய்டன்களுடன் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். இதில் ஒரு ஹாட்ரிக்கைவும் அவர் பதிவு செய்தார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு பூட்டான் வீரர் சோனம் யேஷி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது, தற்போது அதனை லாரா முறியடித்துள்ளார்.
