இந்திய கிரிக்கெட்டில் அடுத்த ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ தயார் ஆகிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ், நேற்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 26 பந்துகளில் 78 ரன்களை விளாசித் தள்ளியுள்ளார்.

புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்களின் பந்துகளைச் சிதறடித்த இவருக்கு, தற்போதே இந்திய சீனியர் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஐபிஎல் தலைவர் அருண் துமால் தனது எக்ஸ் தளத்தில், “இந்த அபூர்வ திறமை கொண்ட வைபவ், இந்திய அணியின் மிக இளம் வயது அறிமுக வீரராக (Youngest Debutant) களமிறங்க முழு தகுதி படைத்தவர்” என்று பிசிசிஐ-க்கு வெளிப்படையாகவே சிபாரிசு செய்துள்ளார்.

16 வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலேயே வைபவ் களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஜஸ்பிரித் பும்ராவின் பந்தையே சிக்சருக்குப் பறக்கவிட்ட இந்த ‘குட்டி புயல்’, தற்போது ஆரஞ்சு நிறத் தொப்பியை (Orange Cap) கையில் வைத்துக்கொண்டு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரின் கதவைத் தட்டி வருகிறார்.