ரயில் பயணம் என்றாலே ஜன்னல் ஓர இருக்கையும், சூடான உணவும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில் உணவின் தரம் குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பெட்டிகளுக்கு இடையில், கழிவறைக்கு மிக அருகிலேயே ஒருவர் தரையில் அமர்ந்து அசால்ட்டாக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருக்கும் காட்சி வைரலாகி வருகிறது. அருகில் ஒரு வாளியில் சென்னாவும் மசாலாவும் வைக்கப்பட்டிருக்க, கீழே ஒரு பிளாஸ்டிக் ஷீட் மட்டுமே விரிக்கப்பட்டுள்ளது.

​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இனி ரயிலில் சாப்பாடு வாங்கவே பயமாக இருக்கிறது” எனத் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது எந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்ற விவரம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், ரயில்வே உணவகங்களில் சுகாதாரம் எந்த நிலையில் இருக்கிறது என்ற மிகப்பெரிய விவாதத்தை இது கிளப்பியுள்ளது. ருசியை விட சுத்தமே முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது.