கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ அழகுவேலின் கணவரும், நகரச் செயலாளருமான பாபு தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். தனது மனைவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக அவர் கூட்டத்திலேயே பகிரங்கமாகத் தெரிவித்தார். இதனால் அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் குமரகுருவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பாபு, அங்கிருந்த நிர்வாகிகளின் காலில் விழுந்து வணங்கிவிட்டு சோகத்துடன் வெளியேறினார். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் மேடையிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தி பதவியை ராஜினாமா செய்தது, கள்ளக்குறிச்சி அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
