விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முனீஸ்வரன் மீது ஏற்கனவே ஒரு மூதாட்டியை வன்கொடுமை செய்த வழக்கு உள்ளது. அந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. தற்போது அந்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தங்கள் மனுவில், “முனீஸ்வரனின் தண்டனையை நிறுத்தி வைத்து அவரை ஜாமீனில் வெளியே விட்டதால்தான், அவர் எங்கள் மகளை வன்கொடுமை செய்து கொலை செய்யும் துணிச்சல் பெற்றுள்ளார்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளனர். சமூகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், குற்றவாளியின் பழைய தண்டனை நிறுத்தி வைப்பு உத்தரவு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
