இந்தியாவில் தனியாகச் சுற்றுலா மேற்கொண்டு வரும் கனடா நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், புதுடெல்லி ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் ஏமாற்றப்பட முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த கிளாடியா பலெண்டா (Klaudia Falenta) என்ற அந்தப் பெண், தனது ஐந்தாவது நாள் பயணத்தின் போது வாரணாசி செல்வதற்காகப் புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது நுழைவாயிலில் அவரை மறித்த நபர் ஒருவர், கிளாடியாவின் ரயில் டிக்கெட்டைச் சரிபார்ப்பது போல் நடித்து, அது செல்லாத டிக்கெட் என்றும், உடனே வேறொரு அலுவலகத்திற்கு வந்து புதிய டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் கூறி அவரைத் திசைதிருப்ப முயன்றுள்ளார்.
சுமார் 10 நிமிடங்கள் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிளாடியா, தனது முந்தைய பயணச் சீட்டுகளை ஆதாரமாகக் காட்டிய பின்னரே அங்கிருந்து தப்பித்துச் செல்ல முடிந்தது.
View this post on Instagram
“>
இந்தச் கசப்பான அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் காணொலி வெளியிட்ட கிளாடியா, “பயணம் என்பது எப்போதும் மகிழ்ச்சியானதாக மட்டுமே இருப்பதில்லை; இது போன்ற சவால்களே ஒருவரை பக்குவப்படுத்தும்” என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
ரயில் புறப்பட சில நிமிடங்களே இருந்த நிலையில், இத்தகைய மோசடி முயற்சியால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் காணொலி வைரலானதைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து இணையவாசிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல் மற்றும் விழிப்புடன் இருத்தல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்று பயண ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
