மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளையும் தலைகுனிய வைத்துள்ளது. சஞ்சய் காலனியைச் சேர்ந்த மாணவன் மானவேந்திர சிங், தனது வீட்டின் முன் பல நாட்களாக வழிந்தோடும் சாக்கடை நீரால் அவதிப்பட்டு வந்துள்ளான். சைக்கிள் ஓட்ட முடியாமல், விளையாட முடியாமல் தவித்த அந்தச் சிறுவனின் குடும்பம், நான்கு முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அந்தச் சிறுவன், “லஞ்சம் கொடுத்தால் தான் அரசு வேலை நடக்கும்” என்ற கசப்பான உண்மையை உணர்ந்து ஒரு அதிரடி முடிவெடுத்தான்.

​தனது உண்டியலை உடைத்து 20 ரூபாய் எடுத்த அந்தச் சிறுவன், அதில் 4 சாக்லேட்டுகளை வாங்கிக் கொண்டு நேராக மாவட்டப் பஞ்சாயத்து CEO-விடம் சென்றான். அவர் மேஜையில் சாக்லேட்டுகளை வைத்து, “இதை லஞ்சமாக வைத்துக் கொண்டு என் வீட்டு முன் இருக்கும் சாக்கடையைச் சரி செய்யுங்கள்” என்று மழலை மாறாமல் முறையிட்டான். ஒரு சிறுவன் இப்படிப் பேசியதைக் கேட்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனே அதிகாரிகளைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட CEO, ஒரு சிறுவனின் மனதில் ஊழல் குறித்த இவ்வளவு ஆழமான பிம்பம் பதிந்திருப்பதை எண்ணி வேதனை தெரிவித்தார்.