நூர் இனாயத் கான் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உளவாளியை பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் கொடூரமான நாஜிப் படைகளுக்கு எதிராக உளவு பார்த்துச் சிறப்பாகச் செயல்பட்ட அவரது பங்களிப்பைப் பாராட்டி, பிரான்ஸ் அரசு அவருக்குத் தபால் தலையை வெளியிட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டு மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் நூர் இனாயத் கான். பிரான்ஸ் அரசு மூலம் கவுரவிக்கப்பட்ட ஒரே இந்திய வம்சாவளிப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூர் இனாயத் கான் 1914ஆம் ஆண்டு மாஸ்கோவில் பிறந்தார். அவரது குடும்பம் பின்னர் லண்டன் வழியாக பாரீஸில் குடியேறியது. இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸ் வீழ்ச்சி அடைந்தபோது, அவர் குடும்பத்துடன் இங்கிலாந்திற்குச் சென்றார்.
அங்கு அவர் பிரிட்டன் விமானப் படையில் சேர்ந்து, பின்னர் சிறப்பு நடவடிக்கை குழுவில் (Special Operations Executive – SOE) உளவு பார்க்கும் பிரிவில் தீவிரப் பயிற்சி பெற்றார். 1943ஆம் ஆண்டு ஜூன் மாதம், நாஜி படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சில் ஊடுருவி, உளவு பார்க்கும் செயலைச் செய்த முதல் பெண் உளவாளி என்ற பெயரையும் பெற்றார்.
இருப்பினும், சில காலத்திலேயே நூர் இனாயத் கான் நாஜிப் படைகளால் கைது செய்யப்பட்டார். டச்சாவ் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அவர், 1944ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி, வெறும் 30 வயதில் தூக்கிலிடப்பட்டார்.
அவரது மரணத்திற்குப் பின்னும், போரில் அவர் வழங்கிய உளவுத் தகவல்களும், வீரதீரச் செயல்களும் பிரிட்டன் ராணுவத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இதன் காரணமாகவே, போர் முடிந்து சுமார் 80 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரான்ஸ் அரசு அவரைத் தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
