ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டிக்கு முன்னதாக, இந்திய பேட்டர்களுக்கு நமீபிய கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தினாலும், எராஸ்மஸின் சுழற்பந்துவீச்சு இந்திய வீரர்களை திணறடித்தது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
இந்தப் போட்டியில் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய எராஸ்மஸ், தனது வினோதமான பந்துவீச்சு முறையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கைப் போலவே, கையை மிகவும் தாழ்த்தி வீசும் ‘ரவுண்ட் ஆர்ம்’ முறையை அவர் கையாண்டார். ஒரு கட்டத்தில், ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து பந்துவீசி பேட்டர்களை ஏமாற்ற முயன்றார்.
நடுவர் ராட் டக்கர் அருகே நின்று அவர் பந்துவீச முயன்றபோது, அது ‘டெட் பால்’ (Dead ball) என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எராஸ்மஸ் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பயிற்சியின் போது எராஸ்மஸ் வீசிய முதல் பந்திலேயே இந்திய அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அவரது பந்துவீச்சு முறையை கணிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் பலமுறை அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, குனிந்தபடி மிக அகலமான கோணத்தில் இருந்து அவர் பந்தை வீசியது பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
பாகிஸ்தான் அணியில் இதேபோன்ற பந்துவீச்சு முறையைக் கொண்ட உஸ்மான் தாரிக் இடம்பெற்றுள்ளார். எராஸ்மஸின் பந்துவீச்சிலேயே இந்திய வீரர்கள் தடுமாறிய நிலையில், கொழும்பில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியப் போட்டியில் உஸ்மான் தாரிக்கை இந்திய பேட்டர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கவலை இணையதளங்களில் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் நேற்றைய போட்டியில் வெற்றி கிடைத்தாலும், இதுபோன்ற வித்தியாசமான பந்துவீச்சு முறைகளை எதிர்கொள்ள இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
