டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஹை-வோல்டேஜ் போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் துருப்புச் சீட்டாகக் கருதப்படும் உஸ்மான் தாரிக்கின் வினோத பந்துவீச்சைச் சமாளிக்க, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு அதிரடித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார்.
பாகிஸ்தான் ஸ்பின்னர் உஸ்மான் தாரிக், பந்தை வீசும் போது இடையில் சற்றே நிறுத்தி (Pause), பின்னர் ‘ஸ்லிங் ஆர்ம்’ முறையில் வீசுகிறார். கடந்த போட்டியில் அமெரிக்காவிற்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய இவர், இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறார். குறிப்பாக, நமீபிய கேப்டன் எராஸ்மஸின் இதே போன்ற பந்துவீச்சில் இந்திய வீரர்கள் திணறியது கவலையை அதிகரித்துள்ளது.
தனது யூடியூப் பக்கத்தில் இது குறித்துப் பேசிய அஸ்வின், தாரிக்கை நிலைகுலையச் செய்ய ஒரு வழியைக் கூறியுள்ளார்: “தாரிக் பந்தை வீசும் முன் இடையில் நிறுத்தும் போது, பேட்டர் ஸ்டம்பை விட்டு விலகிச் செல்லலாம். பந்து எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாததால் நான் விலகிவிட்டேன் என்று பேட்டர் காரணம் கூறலாம். இது கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டதே.“
பேட்டர் இப்படிச் செய்தால், அது நடுவருக்குப் பெரிய தலைவலியை உருவாக்கும். பந்துவீச்சாளரை எச்சரிக்க வேண்டுமா அல்லது பேட்டரை எச்சரிக்க வேண்டுமா என்று நடுவர் குழம்புவார். வழக்கமாகப் பந்துவீச்சாளருக்குத் தான் முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும்.” ஒருவேளை 24 பந்துகளுக்கும் இந்திய வீரர்கள் இப்படிச் செய்தால், தாரிக் தனது பந்துவீச்சு முறையையே மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். பாகிஸ்தானின் துருப்புச் சீட்டு வேலை செய்யாமல் போகும்.“
இந்தத் தந்திரத்தைச் சொன்னதோடு நின்றவிடாமல், இந்திய வீரர்களுக்கு ஒரு சவாலையும் அஸ்வின் விடுத்துள்ளார். “நான் அந்த இடத்தில் இருந்தால் நிச்சயம் இதைச் செய்திருப்பேன். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான இவ்வளவு பெரிய போட்டியில், இந்தத் தில்லான காரியத்தைச் செய்ய இந்திய பேட்டர்களில் யாருக்காவது துணிச்சல் இருக்கிறதா என்பது சந்தேகமே” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொழும்பு ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், அஸ்வினின் இந்த “மைண்ட் கேம்” ஆலோசனையை இந்திய வீரர்கள் களத்தில் செயல்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
