வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் அமைந்துள்ள இந்தியத் துணை உயர் தூதரக (Assistant High Commission) வளாகத்திற்குள், இந்தியப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான நரேன் தர் இன்று காலை மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சுமார் 9:30 மணியளவில் தூதரக வளாகத்திற்குள் அதிகாரி நரேன் தர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிட்டகாங் நகரப் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நரேன் தர் எப்படி உயிரிழந்தார், இதற்குக் காரணம் தற்கொலையா அல்லது ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த மர்ம மரணம் குறித்து வங்காளதேச போலீசார் அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தியத் தூதரகம் தரப்பில் இதுவரை இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.