மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கத்தாரா ஹில்ஸ் பகுதியில், கடந்த மே 12ஆம் தேதி இரவு தன் கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 வயதான நோய்டா பெண் ட்விஷா சர்மாவின் மரண வழக்கில் தற்போது புதிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
வரதட்சணை கொடுமை காரணமாகவே ட்விஷா அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரது உடலில் மரணத்திற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட பல காயங்கள் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், உண்மைகளை வெளிக்கொண்டு வர ட்விஷாவின் உடலை இரண்டாவது முறையாகப் பிரேதப் பரிசோதனை (Second Postmortem) செய்ய உத்தரவிடக் கோரி அவரது குடும்பத்தினர் போபால் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் ட்விஷாவின் கணவரான வழக்கறிஞர் சமர்த் சிங் மற்றும் ஓய்வுபெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதியான (ADJ) அவரது மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் மீது போலீசார் ஏற்கனவே வரதட்சணை மரணம் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்துள்ளனர்.
இதில் தலைமறைவாக உள்ள கணவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இந்த இரண்டாவது பிரேதப் பரிசோதனை மனு நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
