ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்தியா மற்றும் பிரதமர் மோடி குறித்து மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே விரைவில் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக உறுதியளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை தனது ‘மிகச் சிறந்த நண்பர்’ என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிக பலன்களைப் பெற்றுக்கொண்டு, பதிலுக்கு அதிக வரிகளை விதித்ததாகவும், ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் முற்றிலும் தலைகீழாக மாறி அமெரிக்கா அதிக லாபம் ஈட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். எனினும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுவாக இருப்பதால் விரைவில் இறுதி வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவின்  நான்கு நாள் இந்தியப் பயணத்தின் மூலம் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றுள்ள சூழலில், அமெரிக்க அதிபரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. சந்தை அணுகல், சுங்க நடைமுறைகள் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்தியா குறித்து பேசுகையில், “ரஷ்யாவுடன் இந்தியா வைத்துள்ள உறவின் காரணமாக, இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ரஷ்யாவுடனான கூட்டுறவு விஷயத்தில் இந்தியாவின் மீது அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முயன்றாலும், பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமைக்கு முன்னால் அந்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போய்விடுவதாக புதின் பாராட்டியுள்ளது சர்வதேச அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது .