இந்திய அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FPI) மேற்கொள்ளும் முதலீடுகளுக்கான வட்டி வருவாய் மற்றும் மூலதன ஆதாய வரிகளை முற்றிலும் நீக்குவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சமீபகாலமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளை விட்டு வெளியேறித் தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வரும் சூழல் அதிகரித்துள்ளது.
இந்த நிதி வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தி, இந்தியப் பொருளாதாரச் சந்தையை வலுப்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு இந்த புதிய அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம், இந்திய அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இனி வட்டி வருமானத்தின் மீதோ அல்லது மூலதன ஆதாயத்தின் மீதோ எந்தவொரு வரியும் விதிக்கப்படாது; அவற்றுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பெரும் அளவில் ஈர்க்கும் என்றும், இதன் மூலம் இந்தியப் பத்திரச் சந்தையில் மீண்டும் அன்னிய முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
