இன்றைய கார்ப்பரேட் உலகில், சம்பளம் உயர உயர அதனுடன் சேர்ந்து மன அழுத்தமும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதிக சம்பளமும், பதவியும் கிடைத்துவிட்டால் வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற பொதுவான எண்ணத்தை உடைக்கும் வகையிலான ஒரு உண்மைச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பிரபல சமூக வலைத்தள பக்கமான ரெடிட்டில் கார்ப்பரேட் மேலாளர் ஒருவர் தனது மனக்குமுறலை பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு தற்போது மாதம் ₹2.5 லட்சம் சம்பளம் கிடைப்பதாகவும், சொந்த வீடு, கார், வங்கி இருப்பு, பங்குச்சந்தை முதலீடு என பொருளாதார ரீதியாக அனைத்து வசதிகளும் இருந்தும் தம்மால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “முன்பு நான் மாதம் ₹25,000 சம்பளம் வாங்கிய போதுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இப்போது சிறுவயதில் கண்ட கனவுகள் எல்லாம் நிறைவேறிவிட்டாலும், அன்றைக்கு ரோட்டோரக் கடைகளில் சட்டை வாங்கியதும், சாலையோரக் கடைகளில் ஆசை தீர சாப்பிட்டதுமான அந்த நிஜமான மகிழ்ச்சியை எங்கோ தொலைத்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வதால், தான் ஒரு மனிதனா அல்லது இயந்திரமா என்றே தெரியவில்லை என்றும், பணம் இருந்தும் அதைத் தனக்காகச் செலவழிக்கக்கூட உடலில் தெம்போ, மனதில் உற்சாகமோ இல்லை என்றும் அவர் குமுறியுள்ளார்.

இந்தப் பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும், ‘பணத்தால் மன அமைதியை விலைக்கு வாங்க முடியாது’ என தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வரும் வேளையில், சில நாட்களுக்கு முன்பு கேரளா சேர்ந்த பெண் இன்ஜினியர் ஒருவர் இதே போன்ற மன அழுத்தம் காரணமாக ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆட்டோ ஓட்டச் சென்ற சம்பவமும் இதனுடன் ஒப்பிடப்பட்டு வைரலாகி வருகிறது.