முறையான காரணங்களின்றி கணவனுடன் உடலுறவு கொள்ளத் தொடர்ச்சியாக மறுப்பதும், நீண்ட காலம் பிரிந்திருப்பதும் மனக் கொடுமை என்று சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், கணவருக்கு விவாகரத்து வழங்கி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த 2025-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து மனுவைத் தள்ளுபடி செய்தது.

மேலும் தங்களது தீர்ப்பில், “முறையான காரணங்களின்றி தாம்பத்திய உறவை மறுப்பது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, திருமண வாழ்க்கையின் அடித்தளத்தையே சிதைத்துவிடும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். நீதிமன்றத்தின் பல்வேறு சமரச முயற்சிகளுக்குப் பிறகும் தம்பதியரிடையே சுமுக முடிவு ஏற்படாததையும், வெறும் காகித அளவில் மட்டுமே நீடிக்கும் இத்தகைய உடைந்த திருமண உறவைத் தொடரக் கட்டாயப்படுத்துவது இருதரப்புக்குமே செய்யும் கொடுமை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, தங்களது சிறப்புப் பிரிவான அரசியல் சாசன சட்டப்பிரிவு 142-ஐப் பயன்படுத்தி, இந்தத் திருமண உறவை முழுமையாக ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.