அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ‘ஜி2’ திட்டம், அதாவது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பிரத்யேகக் கூட்டாண்மை குறித்த முயற்சிக்கு, அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா பல தசாப்தங்களாக சீனாவை ஒரு மூலோபாய எதிரியாகவே கருதி வந்துள்ள நிலையில், டிரம்பின் இந்த புதிய அணுகுமுறை அமெரிக்கக் கொள்கையின் மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்த நடவடிக்கையால், ஆசியாவில் பல்துறை சமநிலையைப் பேண நினைக்கும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்குப் புதிய சவால்கள் எழுந்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து எச்சரித்துள்ள ஜான் போல்டன், அமெரிக்காவின் முக்கிய மூலோபாய பங்காளியாக விளங்கும் இந்தியாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, சீனாவுடன் மட்டும் நெருக்கம் காட்ட முயல்வது அமெரிக்காவின் சொந்த நலன்களுக்கே ஆபத்தாக முடியும் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்நிலையில் உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியாவின் முக்கியத்துவத்தை ஓரங்கட்டுவது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், சீனா போன்ற ஒரு சவாலான நாட்டை மட்டும் முன்னிறுத்துவது நீண்ட கால அடிப்படையில் தவறான விளைவுகளைத் தரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.