மத்திய கிழக்கில் மோதலை தூண்டும் வகையில் ஈரான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. ஈரானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டுப் பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை நிதியளித்து முன்னெடுத்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதன்படி, ஈரான் தொடர்புடைய பெட்ரோலியம், பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விற்பனை, கொள்முதல் வர்த்தகங்களில் ஈடுபட்ட 20 சர்வதேச நிறுவனங்களுக்கு பொருளாதார தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த காஞ்சன் பாலிமர்ஸ், ஆல்கெமிக்கல் சொல்யூசன்ஸ், ராம்னிக்லால் எஸ். கொசாலியா அன் கோ, ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் லிமிடெட் மற்றும் பெர்சிஸ்டன்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஈரான் உயர் தலைவருடன் நெருக்கமாக தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கும் அமெரிக்க நிதித்துறை தடை விதித்துள்ளது. அதே நேரத்தில், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதி வேலைப்பாடு செய்யப்பட்ட தாமிரம் மற்றும் தாமிரப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலில் வருகிறது. இந்தியாவுக்கு இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையை சிக்கலாக்கும் வகையில் உள்ளது.
