அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தொடர்பாக இந்தியா அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியா-அமெரிக்கா இடையே வாணிகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இரு நாடுகளும் விவசாயம் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் உடன்பாடு எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு உட்பட இந்தியா—மீது வரி விதித்திருந்த நிலையில், அதை ஜூலை 31 வரை நீட்டித்தார். ஆனால், அந்த காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, புதிய வரிவிதிப்பு நடைமுறையில் வந்துள்ளது. டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா நல்ல தோழராக இருந்தாலும், அமெரிக்காவிலிருந்து பொருட்கள் இறக்குமதிக்கு வேறு எந்த நாடும் விதிக்காத அளவுக்கு அதிக வரி விதிக்கிறது. இந்தியாவின் பணமற்ற வர்த்தக தடைகள் மிகவும் கடுமையானவை” என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் ராணுவ உபகரணங்கள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்கி வருவதாகவும், இது உக்ரைனில் போரை நிறுத்தும் உலகத்திற்கான முயற்சிக்கு எதிரானது என்றும் டிரம்ப் தெரிவித்தார். எனவே, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் அதற்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் இந்தியா-அமெரிக்கா வாணிக உறவுகளுக்கு புதிய சவால்களைக் கொண்டுவரும் வகையில் அமையக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
