உலகின் முன்னணி புகையிலை நிறுவனமான ‘பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ’ (BAT), தனது உலகளாவிய 47,000 ஊழியர்களில் சுமார் 20 சதவீத ஊழியர்களை ஏறத்தாழ 9,000 பேரை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் 5,500 ஊழியர்கள் நேரடியாகப் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர். மேலும் 3,500 பணியிடங்கள் வெளிநிறுவனங்களுக்கு மாற்றப்படவுள்ளன. அமெரிக்காவில் உள்ள அதன் துணை நிறுவனமான ‘ரெனால்ட்ஸ் அமெரிக்கன்’ வணிகத்திற்கு இந்த ஆட்குறைப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பாரம்பரிய சிகரெட்டுகளுக்கான தேவை ஆண்டுக்கு 2 சதவீதம் வரை குறைந்து வருவதாலும், அதற்குப் பதிலாக ‘வேப்ஸ்’ (Vapes) மற்றும் நிகோடின் பவுச்சுகள் போன்ற புகையில்லா (Smoke-Free) தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருவதாலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2028-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 600 மில்லியன் பவுண்டுகள் செலவைச் சேமிக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வுஆகியவற்றின் பயன்பாடு அதிகரிப்பதும் இந்த வேலைவாய்ப்பு இழப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று நிறுவனத்தின் இடைக்கால சிஎப்ஓ ஜாவேத் இக்பால் தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் உள்ள தனது 8-ஆவது பெரிய சிகரெட் தொழிற்சாலையை அந்நிறுவனம் மூடியுள்ளது.
மேலும், தனது சேவை மையப் பணிகளை ‘அக்செஞ்சர்’ மற்றும் ‘சிஸ்டம்ஸ் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதால், பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பணியிடங்கள் பாதிக்கப்படவுள்ளன. இந்த மாற்றங்களால் பல ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஒப்புக் கொண்டுள்ள நிறுவனத்தின் சிஇஓ தாடியூ மரோகோ, இந்த இக்கட்டான மாறும் காலத்தில் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும், மரியாதையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
