பயங்கரவாதத்தை ஒழிப்பதாக சர்வதேச அரங்கில் நாடகமாடும் பாகிஸ்தானின் உண்மை முகம் மீண்டும் உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் ‘மிகவும் தேடப்படும்’ பயங்கரவாதியும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணைத் தலைவருமான சைஃபுல்லா கசூரி, பாகிஸ்தான் ராணுவத்துடனான தனது நெருக்கத்தை வெளிப்படையாகப் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்தானில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே சைஃபுல்லா கசூரி உரையாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்படும்போது, அவர்களின் இறுதிச் சடங்கு மற்றும் பிரார்த்தனைகளை முன்னின்று நடத்த ராணுவமே தன்னை அழைப்பதாக அவர் பெருமையுடன் கூறுகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் தெற்கு வஜீரிஸ்தானில் பாகிஸ்தான் சிப்பாய் ஒருவரின் இறுதிச் சடங்கில் கசூரி பங்கேற்றது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது அழிக்கப்பட்ட லஷ்கர் அமைப்பின் தலைமையகத்தை (முரிட்கே பகுதி) மீண்டும் கட்டியெழுப்ப, பாகிஸ்தான் அரசாங்கமும் ராணுவமும் பெருமளவில் நிதியுதவி செய்ததாக கசூரி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இது பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாகவே ஆதரவு அளித்து வருவதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராகப் பேசியுள்ள கசூரி, “எனது பெயரைக் கேட்டாலே இந்திய உளவு அமைப்புகள் நடுங்குகின்றன” எனத் தம்பட்டம் அடித்துள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள் மற்றும் அணைகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்றும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடி எச்சரிக்கை விடுப்பதாகவும் அந்த வீடியோவில் அவர் விஷத்தைக் கக்கியுள்ளார். இந்நிலையில் 26 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் இந்த சைஃபுல்லா கசூரி.
பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆதரவு பெற்ற ‘பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக்’ கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே இந்த வீடியோ நேரலையாகப் பகிரப்பட்டுள்ளது. பேனா பிடிக்க வேண்டிய பள்ளிச் சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பயங்கரவாதிக்கு மேடை அமைத்துக் கொடுத்தது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதில்லை என ஐநா சபையில் பாகிஸ்தான் கூறிவரும் அனைத்தும் வெறும் கண்துடைப்பு என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது.
