திமுக இளைஞரணி மாநாட்டின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்தியாவிலேயே எடப்பாடி பழனிச்சாமி தான் முரட்டு அடிமை என்று விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசும்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ‘முரட்டு அடிமை’ என்று கூறிய உதயநிதி, “பாஜகவின் கிளைக் கழகமாக இருந்த அதிமுக, தற்போது அக்கட்சியின் ‘இலையாகவே’ மாறிவிட்டது.
முரட்டுப் பக்தர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இந்தியாவிலேயே மிகப்பெரிய முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி தான். மோடி மற்றும் அமித் ஷாவின் கால்களையே பார்த்துக் கொண்டு நடந்தால், முட்டுச் சந்தில்தான் போய் நிற்க முடியும்” என்று கடுமையாகச் சாடினார்.
மத்திய அரசின் ‘டபுள் இன்ஜின்’ முழக்கத்தை விமர்சித்த அவர், “திராவிட மாடல் என்னும் ‘சிங்கிள் இன்ஜினை’ வைத்துக்கொண்டு தமிழகம் ஏற்கனவே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிவிட்டது. ஆனால் நீங்கள் சொல்லும் ‘டப்பா இன்ஜின்’ ஆட்சியில் பீகார், உபி போன்ற மாநிலங்கள் 6 சதவீத வளர்ச்சியைக்கூடத் தொடவில்லை.
தேர்தல் வரும்போது மட்டும் பிரதமருக்குத் தமிழகம் நினைவுக்கு வரும்; திருக்குறள் பேசுவார், கடலுக்கடியில் தியானம் செய்வார். ஆனால் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு திட்டத்தையும் தரமாட்டார்” என்று குற்றம் சாட்டினார். மேலும் வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற தொண்டர்கள் இப்போதே கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
