2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் அண்மையில் தொடங்கியது. பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலிடம் விருப்பமனுக்கள் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 50,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் திரண்டனர்.
ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாகிகள் திணறினர். ஒரு கட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த விருப்பமனுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால், “மனுக்கள் காலியாகிவிட்டன, நாளை வாருங்கள்” என்று நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டு, விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பனையூர் தொகுதியில் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட வேண்டும் எனப் பல தொண்டர்கள் விருப்பமனு அளித்ததாகச் செய்திகள் பரவின. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாகப் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “தமிழகத்தில் ‘பனையூர்’ என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதியே கிடையாது என்பது கூடத் தெரியாமல் தவெக-வினர் செயல்படுகின்றனர். அங்கு இருப்பவர்கள் அனைவரும் விவரம் தெரியாத சின்னப் பிள்ளைகளாக உள்ளனர். ஏதோ விற்பனைப் பண்டத்தைப் போல விருப்பமனுக்களை வங்கியுள்ளனர்” என விமர்சித்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியில் முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய அளவில் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. அதே வேளையில், சீமானின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
