17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றுக்குள் நுழைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றின் இரண்டாவது ஆட்டமாக நேற்று இரவு துபாயில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. சகிப் சதா பர்ஹான் 58 ரன்களுடன் அதிகபட்சம் எடுத்தார். இந்திய அணியில் ஷிவம் துபே 2 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 74 ரன்கள், சுப்மன் கில் 47 ரன்கள் என சிறப்பாக ஆடினர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக அபிஷேக் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், இந்திய இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் வம்பிழுக்க முயன்றார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்ததுடன், பவுண்டரி அருகில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ரவூப்பை பார்த்த இந்திய ரசிகர்கள் “கோலி.. கோலி..” என கூச்சலிட்டு கலாய்த்தனர். இந்த கூச்சல் ஒரு சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது. அதாவது கடந்த 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஹாரிஸ் ரவூப்பின் பந்தில் விராட் கோலி அடித்த ஸ்ட்ரெயிட் சிக்சர், 21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஷாட் என ஐ.சி.சி. பாராட்டியது. இதை நினைவுபடுத்தும் வகையில் ரசிகர்கள் கோலி பெயரை முழங்கினர்.

 

இந்த நிமிடத்தில் ஹாரிஸ் ரவூப் தனது கைகளைக் கொண்டு ‘6 விமானங்கள் வீழ்த்தப்பட்டன’ என்றபடி சைகை செய்தார். இது, கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” எனும் பதிலடி நடவடிக்கையை அடிப்படையாக கொண்டது. மே 7-ந்தேதி இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதன்பின், பாகிஸ்தான் மீடியாக, “இந்தியாவின் 6 விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்” என பலமுறை கூறியது. அந்தக் கூறுகையே, ஹாரிஸ் ரவூப்பின் சைகைக்கு பின்னணியாக இருந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் இந்தச் சைகையை பார்த்த இந்திய ரசிகர்கள், மீண்டும் “கோலி… கோலி…” என முழங்கினர். இது மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.