2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில், பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மோசமாக விளையாடினர் அவரது விளையாட்டு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்திய அணிக்கு எதிராக 3.5 ஓவர்கள் வீசி, எந்தவொரு விக்கெட்டையும் பெற முடியாமல், 40 ரன்கள் கொடுத்து தவித்தார். இதையடுத்து, பாகிஸ்தானின் முன்னாள் லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா, “ஷாஹீன் அப்ரிடி ஒரு மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும்” என உறுதியாக பரிந்துரை செய்துள்ளார்.
தொடர்ந்து IANS செய்தியாளர்களிடம் பேசிய கனேரியா, “வயது ஒரு காரணி தான். ஆனால் ஷாஹீனை மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து விளையாடவிடுவது தவறு. அவர் எந்த வடிவத்தில் சிறப்பாக செயல்படுவாரோ அதையே தொடர வேண்டும்.
குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் அவர் தாக்கம் காணப்படவில்லை. எனவே, T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இடம் பெறலாம் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும், “நீண்ட காலமாக தொடர்ச்சியாக விளையாடுவதால் அவர் மனதளவில் சோர்ந்திருக்கலாம்.
சில வாரங்களாவது ஓய்வெடுத்து, புத்துணர்ச்சியுடன் திரும்பி வர அவர் அவசியம் இடைவெளி எடுக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
