துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்–4 சுற்றின் முக்கியமான போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. சகிப் சதா பர்ஹான் 58 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர்  களமிறங்கிய இந்தியா, 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 74 ரன்கள், சுப்மன் கில் 47 ரன்கள் எடுத்தனர். அபிஷேக் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தப் போட்டியின் தொடக்கத்தில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்தில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மூலம் கேட்ச் ஆனார். ஆனால், அந்த பந்தை சாம்சன் தரையோடு பிடித்ததாகக் கருதி, பகார் ஜமான் உள்நடுவரிடம் மறுபரிசீலனை கோரினார்.

மேலும் மூன்றாவது நடுவர் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தபோது, பந்து முதலில் சாம்சனின் விரல்களைத் தொட்டு பின்னர் கைகளுக்குள் கேட்சாக மாறியது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து அவர் அவுட் எனத் தீர்ப்பு அளித்தார். பகார் ஜமான் அதில் ஏமாற்றம் தெரிவித்தபோதும், மைதானத்தைக் விட்டு திரும்பினார். இந்த முடிவை பாகிஸ்தான் ரசிகர்கள் சோதனையான தீர்ப்பு என விமர்சித்தனர். இதுகுறித்து நேரலையில் விளக்கம் அளித்த இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறும்போது, “மைதான நடுவரின் முடிவை மாற்ற, தெளிவான வீடியோ ஆதாரம் தேவைப்படும். அந்த கேட்சில், பந்துக்கு அடியில் சாம்சனின் விரல்கள் இருந்தது தெளிவாக தெரிகிறது. எனவே 3-வது நடுவரின் முடிவில் சந்தேகம் இல்லை,” என கூறினார்.