2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முக்கியமான போட்டியில், இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை மெய்மறக்க வைத்தார்.

செப்டம்பர் 21ஆம் தேதி இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த மேட்ச், 25 வயதான அபிஷேக் சர்மாவிற்கான கனவு மாறா நிகழ்வாக அமைந்தது. பாகிஸ்தானை எதிரியாகக் கொண்டே அடித்தார் என்றால் மிகை ஆகாது. 39 பந்துகளில் 74 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட்: 189.74) எடுத்து, 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடித்த அபிஷேக், இந்திய அணிக்கு உறுதியான தொடக்கத்தை தந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சு அணியை அசராமல் தாக்கிய அவர், இப்போது ரசிகர்களின் அன்பில் கலந்து  பட்டையைக் கிளப்பியுள்ளார்.

அபிஷேக் சர்மாவை உருவாக்கியவர் யாரென்று கேட்டால், அதற்கான பதில் யுவராஜ் சிங் தான். இந்திய அணியின் முன்னாள் ஸ்டார் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், அபிஷேக்கை சிறு வயதிலிருந்தே பயிற்சி அளித்து, அவரை சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயார்படுத்தியுள்ளார்.

2018 இல் ஐபிஎல்லில் அறிமுகமாகிய அபிஷேக், 2024 ஐபிஎல் சீசனில் தன் திறமையை முழுமையாக நிரூபித்தார். அதன் அடிப்படையில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இதுவரை 21 டி20 போட்டிகளில் விளையாடிய அபிஷேக், 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடித்து 708 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 197.2 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது 2025 ஆசியக் கோப்பையில், 4 போட்டிகளில் 173 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இவருக்கான வாய்ப்பு எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர்.