அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில், நிகிதா கோடிஷாலா (27) என்ற இந்திய இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேரிலாந்து மாகாணம் எலிகாட் நகரில் வசித்து வந்த நிகிதா கோடிஷாலா, ஒரு சுகாதாரத் துறை நிபுணராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நிகிதா காணாமல் போனதாக, அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மாவே போலீசில் புகார் அளித்துள்ளார்.
டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று, கொலம்பியாவில் உள்ள தனது குடியிருப்பில் நிகிதாவை கடைசியாகப் பார்த்ததாகவும், அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சர்மா புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜனவரி 3-ஆம் தேதி அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு நிகிதா கோடிஷாலா கத்திக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில், டிசம்பர் 31-ஆம் தேதியே நிகிதா கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையில், நிகிதா காணாமல் போனதாக நாடகமாடிப் புகார் அளித்த அதே நாளில் (ஜனவரி 2), அர்ஜுன் சர்மா அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, அர்ஜுன் சர்மா மீது முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளனர். சர்மாவை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வர, மத்திய சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இந்தியா – அமெரிக்கா இடையிலான குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிகிதாவின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்குத் தேவையான அனைத்து தூதரக உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இந்த வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்த நிகிதா, இந்தியாவின் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, தரவு பகுப்பாய்வு மற்றும் சுகாதாரத் துறையில் சிறந்த நிபுணராகப் பணியாற்றி வந்தார்.
நிகிதாவின் இந்தத் துயர மரணம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
