வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோரை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா தலைநகர் காரகாஸில் உள்ள அதிபர் மாளிகையில் நள்ளிரவில் புகுந்த அமெரிக்கச் சிறப்புப் படைகள், குண்டுமழை பொழிந்து இந்தத் தாக்குதலை நடத்தின. இதில் கைது செய்யப்பட்ட மதுரோ, உடனடியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது அமெரிக்கா வழக்குப் பதிவு செய்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (DEA) அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மதுரோ, சிறிதும் அச்சமின்றி அங்கிருந்த அதிகாரிகளுக்குப் புன்னகையுடன் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். “குட் நைட், ஹேப்பி நியூ இயர்” என்று அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மதுரோவின் தலைக்கு 15 மில்லியன் டாலர் வெகுமதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் புரூக்ளினில் உள்ள தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, வெனிசுலா நாட்டைத் தற்காலிகமாக அமெரிக்காவே நிர்வகிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். வெனிசுலாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தை வர்த்தகம் செய்யும் வரை அந்த நாடு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வெனிசுலாவில் டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிகமாக ஆட்சி நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
