நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவி எம்ஜிஆரை பற்றிய அவதூறான மற்றும் இழிவான கருத்துகளை தெரிவித்ததாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: “மேடைகளில் சமத்துவத்தை வலியுறுத்திய, அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் சமதர்ம திராவிட அரசியலை தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் கொண்டுவந்த பேரறிஞர் அண்ணாவையும், அவரது வழியில் ‘அண்ணா திராவிடம்’ என்ற உயரிய கொள்கையை பின்பற்றி அதிமுகவை உருவாக்கி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பை பெற்ற புரட்சித் தலைவராக விளங்கிய எம்ஜிஆர் அவர்களையும், சீமான் இழிவாக விமர்சித்துள்ளார். இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.”
அத்துடன், “மறைந்த தலைவர்களின் பெருமையை இழிவுபடுத்தும் வகையில் வன்மத்துடன் பேசுவது அரசியல் நாகரிகத்திற்குப் புறம்பான செயல். தமிழர்களுக்கே உரித்தான அறம், மரியாதை, பண்பு ஆகியவற்றை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கொள்கையும் வளர்ச்சியும் தழுவிய நம் தலைவர்களை இவ்வாறு அவதூறாகப் பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
