காட்டு விலங்குகளின் வேட்டை மற்றும் சாகச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். ஆனால், விறுவிறுப்புக்கு பெயர் போன சிறுத்தை ஒன்று, தனது அறியாமையால் செய்த செயல் இணையவாசிகளைப் பெருமளவில் சிரிக்க வைத்துள்ளது.

சிறுத்தைகள் பொதுவாக அவற்றின் வேகம் மற்றும் துல்லியமான வேட்டைத் திறனுக்குப் பெயர் பெற்றவை. ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், சேறும் சகதியுமான தண்ணீருக்குள் சிறுத்தை ஒன்று வேட்டையாட முயல்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஏதோ ஒரு இரையைக் கவ்விக்கொண்டு அது கம்பீரமாக வெளியே வருகிறது.

தண்ணீருக்குள் இருந்து அது எதைக் கவ்விக்கொண்டு வருகிறது என்று பார்த்தால், அங்கேதான் ஒரு பெரும் ட்விஸ்ட் காத்திருக்கிறது. தண்ணீருக்குள் பெரிய மீன் அல்லது ஏதோ ஒரு விலங்கைப் பிடித்திருப்பதாக நினைத்து, அந்தச் சிறுத்தை கவ்விக்கொண்டு வந்தது வேறு ஒன்றும் இல்லை – அதன் சொந்த வாலையே!

தனது வாலையே இரை என நினைத்து கவ்விக்கொண்டு வெளியே வரும் அந்தச் சிறுத்தைக்கு, சிறிது நேரம் வரை தான் எதைப் பிடித்திருக்கிறோம் என்பதே புரியவில்லை. ஒரு கட்டத்தில் அது தனது வால்தான் என்பதை உணர்ந்து விடும்படியான காட்சிகள் பார்ப்போரைக் கலகலக்க வைக்கின்றன.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த 18 வினாடி வீடியோவை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர். “பெரிய பூனையாக இருந்தாலும், சிறிய பூனையாக இருந்தாலும் வால் விஷயத்தில் எல்லாம் ஒன்றுதான்” என்றும், “தன்னுடைய முதல் வேட்டையைப் பிடித்த பெருமிதத்தில் சிறுத்தை இருக்கிறது” என்றும் இணையவாசிகள் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இயற்கையில் விலங்குகளும் சில நேரங்களில் இத்தகைய வேடிக்கையான குழப்பங்களுக்கு உள்ளாகும் என்பதை இந்த வீடியோ அழகாகப் படம்பிடித்துள்ளது.